விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)

விஸ்வகர்ம கடவுள்கள்

அருள்மிகு ஸ்ரீ மீனாட்சியம்மன்

தாயானவள் எப்படி பிள்ளையை ஒரு போதும் கைவிடுவதில்லையோ, அது போல பிள்ளைகளாகிய நம்மை ஒரு போதும் அந்த எல்லாம் வல்ல ஆதிசக்தித் தாய் கைவிடுவதில்லை. நம் ஒவ்வொருவருக்கும் தாயாக இருந்து அன்பு காடும் அந்த ஆதிசக்தித் தாயானவள், சென்னை புதுப்பேட்டையில் உள்ள சந்திரபானு தெருவில் அன்னை மீனாட்சியம்மன் என்னும் திருப்பெயர் தாங்கி ஸ்ரீ பரசமய கோளரிநாத மடத்தில் திருச்சன்னதி கொண்டிருக்கிறாள்.

மீனாட்சி பெயர் காரணம்

மீன் போன்ற கண்களை உடையவள் என்பதால் அன்னைக்கு மீனாட்சி என்ற பெயர் தோன்றியது. மீன் + ஆட்சி = மீனாட்சி. மீனம் என்றால் மீனைக் குறிக்கிறது. அட்சம் என்பது கண்ணைக் குறிக்கிறது. அட்சி என்பது கண்ணை உடையவள் என்பதைக் குறிக்கிறது. மீன் தன் முட்டைகளை கண்ணால் பார்த்து நின்று அக்கண்பார்வை திறத்தால் அம்முட்டைகளிலிருந்து குஞ்சுகளைத் தோன்றச் செய்து காப்பாற்றும் இயல்பை உடையது. அவ்வாறே அன்னை மீனாட்சியும் உலகத்து உயிர்களையெல்லாம் தன் அருள் கனிந்த பார்வையால் காத்தருள்கிறாள். அதனால்தான் தேவி மீனாட்சி என்ற திருப்பெயர் பெற்று திகழ்கிறாள்.

மீனாட்சியம்மனின் தனிச்சிறப்பு

மதுரை மீனாட்சியம்மனின் சிறப்புகள் அனைத்தும் இங்கு எழுந்தருளியிருக்கும் தனக்கும் உண்டு என்பதை அன்னை தெற்கு முகமாக எழுந்தருளி அனைவருக்கும் உணர்த்திக் கொண்டு இருக்கிறாள். அன்னை மீனாட்சியம்மையாகிய தடாகை பிராட்டியை மணந்துக் கொண்டதால் தான் சுந்தர பாண்டியனாகிய சிவபெருமான் பலவகையான சிறப்புகளைப் பெற்றார். சடைமுடி கொண்டிருந்த அப்பெருமான் மணிமுடி தரித்தார். ஆண்டியாக இருந்த நிலை நீங்கி பார் முழுதும் ஆட்சி புரிந்தார். அன்னை மீனாட்சி தன் கணவனை செல்வம், அரசு முதலிய வாழ்வில் உயர்த்தும் மனைவியாக குணவதியாக விளங்கினாள். பெண்கள் எப்படி திகழ வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக மீனாட்சியம்மை இத்திருச் சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார். தன் கணவரை உயர்த்திய மீனாட்சியம்மை தன் குழந்தைகளாகிய உலகத்து உயிர்களுக்கெல்லாம் ஆக்கத்தையும், செல்வத்தையும், அருள்பவளாகத் திகழ்கிறாள். பச்சை நிறம் செழிப்பை உணர்த்தும் நிறம். அதனால்தான் பச்சை நிறக்கிளியை மீனாட்சியம்மை தனது கைகளில் தாங்கியிருக்கிறாள்.