விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)

விஸ்வகர்ம கோயில்கள்

ஸ்ரீ பரசமய கோளரிநாத மடத்தில் சன்னதி கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மீனாட்சியம்மன் கோயில்
அமைவிடம்

சென்னை புதுப்பேட்டையில் உள்ள சந்திரபானு தெருவில் அன்னை மீனாட்சியம்மன் என்னும் திருப்பெயர் தாங்கி ஸ்ரீ பரசமய கோளரிநாத மடத்தில் திருச்சன்னதி கொண்டிருக்கிறாள். சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள, அண்ணா சிலை இருக்கும் இடத்திலிருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் இச்சன்னதி அமைந்துள்ளது. அங்கிருந்து நடைபயணமாக வெகு எளிதில் இத்திருக்கோயிலை வந்தடையலாம்.

மீனாட்சி அம்மன் சன்னதி அமைப்பு முறை

சன்னதி கோபுர வாயில் வழியாக நுழைந்ததும் சற்று தாண்டிச் சென்றால் கொடிமரம் கம்பீரமாக காட்சி தருகிறது. அதையடுத்து பலி பீடம், சிம்ம வாகனம், ஆகியவை காட்சியளிக்கின்றன. உள் வாயிலில், வள்ளி, தெய்வயானையுடன் ஆறுமுகப்பெருமான் காட்சி தருகிறார். இடது பக்கம் பிள்ளையார் சன்னதி உள்ளது. உள் வாயிலை சற்று தாண்டியதும், அன்னை மீனாட்சியம்மன் வீற்றிருக்கும் கருவறை வாயிலை அடைகிறோம். அவ்வாயிலின் இரு புறங்களிலும் துவார பாலகிகள் காட்சி தருகிறார்கள். இடதுபுற துவாரபாலகிக்கு பக்கத்தில் ஸ்ரீ பரசமய கோளரி நாதரின் உருவச்சிலை உள்ளது. கருவறையின் உள்ளே அருள்மிகு மீனாட்சியம்மன் கருணை ததும்பும் திருமுகத்துடன் தெற்கு நோக்கி திருக்காட்சி தருகிறாள். வலது கையில் பசுங்கிளி காணப்படுகிறது. தன் கணவனுக்கு அரசாட்சியையும், செல்வத்தையும் அளித்த மீனாட்சியம்மை இங்கு பக்திப் பெருக்குடன் வழிபடும் தாய்மார்களுக்கு அதே மகிமைகளை அவர்களுக்கு அருள்கிறாள். அன்னையை தரிசித்துவிட்டு வெளியெ வரும்போது, சுற்றுப் பாதையில் கணபதி, மகாலட்சுமி, வைஷ்ணவி, துர்கை சன்னதிகள் உள்ளன. சுற்றுப்புற கோபுரத்தில் அஷ்ட லட்சுமிகள், வாராகி சிற்பங்கள் அமைந்திருப்பது தனி சிறப்புக்குரியதாக அமைந்திருக்கிறது.

ஸ்ரீ மீனாட்சியம்மன் சன்னதி திறந்திருக்கும் நேரம்

காலை 8:00 மணி முதல் 11:00 மணி வரையிலும், மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையிலும் சன்னதி திறந்திருக்கும்.